வள்ளிநாயகம் பிள்ளை (19-நூ) | ஊர்: | திருநெல்வேலி மாவட்டம் புதூர். | | தந்தை: | இராமசாமியா பிள்ளை. |
இவர் திருநெல்வேலியில் புகழ்பெற்று விளங்கிய சாலி வாடீசுர ஓதுவா மூர்த்திகள் என்னும் புலவரிடம் தமிழ்க்கல்வி கற்றுப் புலமை அடைந்தார். திருநெல்வேலியில் முத்தமிழாகரம் அச்சுக்கூடம் என்ற பெயரில் அச்சகம் ஒன்று நிறுவி தமிழ் நூல்களை அச்சிட்டுத் தொண்டு புரிந்தார். நெல்லையப்ப பிள்ளை இயற்றிய திருநெல்வேலித் தலபுராணம் இவரால் அச்சிடப்பட்டது. | நூல்: | திருநெல்வேலித் தலபுராணத்திற்கு 43 செய்யுட்களில் வழங்கிய சிறப்புப்பாயிரம். |
வளையாபதி ஆசிரியர் (10-நூ) வளையாபதி ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்று. இந்நூலின் ஆசிரியரையும், கதையையும் அறிய முடியவில்லை. சிலப்பதிகார உரையிலே மூன்று செய்யுட்களும், யாப்பருங்கல உரையிலும், தொல்காப்பியச் செய்யுளியல் இளம்பூரணர் உரையில் ஒரு செய்யுளும் புறத்திரட்டில் 66 செய்யுட்களும் யாப்பருங்கல விருத்தியுரையால் இரண்டு செய்யுட்களும், வளையாபதிச் செய்யுட்கள் எனக் கிடைத்துள்ளன. எனவே இவைகளே வளையாபதியின் அடையாளங்களாக உள்ளன. சிலப்பதிகார உரையில் ‘துக்கம் துடைக்கும்’ எனத்தொடங்கும் செய்யுளும் தொல்காப்பியச் செய்யுளியலில் “உலகம் மூன்றும்” என்னும் முதற் குறிப்புடன் காட்டப் பெறும் செய்யுளும், வளையாபதியைச் சைன நூல் என அறிய ஆதாரமாக உள்ளன. புறத்திரட்டில் உள்ள வளையாபதிச் செய்யுட்கள் அறநெறி பற்றியவை.
|