பக்கம் எண் :

வன்பரணர்

வெண்பா, திருவாப்பனூர்ப் புராணம் முதலியவைகளை ஆராய்ந்து பதிப்பித்து வெளியிட்டுள்ளார். பாண்டி நாட்டுச் சிவத்தலங்களின் புராணங்களைப் பதிப்பித்து வெளியிடக்கருதி பன்முறை படிப்பித்து ஆய்ந்து வந்தார். மதுரை இராமசாமிப் பிள்ளை திருத்தணிகைப் புராணத்தை ஆய்வுக் குறிப்புடன் வெளியிடக் கருதியபோது, இவர் கடினமான பகுதிகளுக்கு விளக்கம் கொடுத்தார்.

இவர் இறுதிக் காலத்தில் மதுரைப் பதியிலேயே தம் உயிர் பிரிய வேண்டுமென்று கருதி, இறப்பை முன்னரேயே அறிந்து, தாம் நினைத்த படியே தெய்வீகமாயினர்.

வன்பரணர் (சங்ககாலம்)

சங்ககாலப் புலவர்களுள் பரணர், நெடுங்கழுத்துப் பரணர் என்ற புலவர்களினின்றும் வேறுபடுத்தியறிய இவர் வன்பரணர் என்று அழைக்கப் பெற்றார். கடையெழு வள்ளல்களில் ஒருவனாகிய கண்டீரக்கோப் பெருநற்கிள்ளியையும் வல்வில்லோரியையும் பாடிப் பரிசு பெற்றவர். இவர் பெயருக்கு முன்னேயுள்ளவன் என்ற அடைமொழிக்கு விளக்கம் தெரியவில்லை. கபிலர், கல்லாடனார், கழைதின்யானையார், காக்கைப்பாடினியார், நச்செள்ளையார், பரணர் முதலிய புலவர்கள் இவர் காலத்தில் வாழ்ந்தவராவர்.

நூல்:நற்றிணை 374; புறம் 148, 149, 150, 152, 153, 155.

வன்னியப்பப் பாவலர் (19-நூ)

ஊர்:திருநெல்வேலி மாவட்டம் சூரன்குடி.
நூல்:திருவனந்தைச் சுப்பிரமணியர் பிள்ளைத் தமிழ் (1888).

இந்நூல் அனந்தையில் கோயில் கொண்டருளும் முருகனைக் குறித்த புகழ் மாலையாகும். பத்துப் பருவங்களை உடையது; 100 செய்யுட்களைக் கொண்டது.