|
பெருந்தகையார் - "விண்டொழிந்தன நம்முடை வல்வினை....... நாதன்மெய்த் தொண்டரோ டினிதிருந் தமையாலே" (திருவலஞ்சுழி - 2) என்ற திருவுள்ளக் குறிப்புடைமை குறிப்பு. |
ஆக்கிய நல்வினைப் பேறு - இது பிள்ளையார் கொண்ட கருத்து. முன்செய்து முற்றிய நல்வினையின் பயன் என்க. சமைத்து ஆக்கிய சோறு என்புழிப்போல மேலொன்றும் செய்ய வேண்டாது உடனே பயன் துய்க்கநின்ற நிலை என்பதாம். |
அன்பர் குழாத்தொடும் எய்தி - "பத்தருட னினிதமரும் பண்பு" கூடுதலால் (2165) அப்பண்பினை இருபாலும் உடனிருந்து அமரும் தன்மை யுடையது அன்பர் குழாமேயாதலின், பிள்ளையார், ஏனை வேதியர் பரிசனம் முதலியோரை உடன் கொள்ளாது அன்பர் குழாத்தொடும் எய்தினார். |
ஏற்கும் - நல்வரவு கொண்டு எதிரேற்கும். எய்தும் பொழுதில் - எதிர்வந்தணையக் (2168) - கண்ட கன்றும் - தொழுதே - அணைந்து - அரசும் - இறைஞ்ச - மதுர மொழியருள் செய்தார் (2169) என்று இம்மூன்று பாட்டுக்களையும் கூட்டிமுடிக்க. |
2168. (வி-ரை.) இப்பாட்டு அரசுகளைப் பிள்ளையார் கண்ட நிலையை ஓவியம் போலச் சித்தரித்துக் காட்டும் அருமைப்பாடுடையது. முன் 1405 - 1490 பாட்டுக்களில் உரைத்தவையும் ஈண்டு வைத்துக் காண்க. அங்குக் கூறியவை அரசுகளைத் திருவதிகை அடியார்கள் கண்ட காட்சியும், திருவாரூரில் அரசுகள் சரித்த நிலைபற்றிய ஆசிரியர் மனத்துட் கண்ட காட்சியுமாம். இங்குக் காணும் காட்சி பிள்ளையார் தம் திருமுன்பு கண்ட காட்சி. |
அவ்வவா காணும் நிலைகள்பற்றி இம்மூன்று காட்சிகளின் ஒற்றுமை வேற்றுமை நயங்களை உய்த்துணர்ந்து கொள்க. திலகவதியம்மையார் அஞ்செழுத்தோதி அளித்த திருவாளன் றிருநீற்றை உருவார அணிந்து உய்ந்த திருக்கோலத்துடன் சமணச் சார்பான மன்னவன் அழைக்க அரசுகள், முன், அமணர் சூழலில் உடன்செல்லக் கண்ட திருவதிகை அடியார்கள், அச்சூழலைவிட்டு அவர் கரையேறித் திருவதிகைத் திருவீதியில் அத்திருவேடத்துடன் வர மீண்டும் கண்டாராதலின் "தூயவெண் ணீறு துதைந்த பொன்மேனி" (1405) முதன்மைபெற அவர்க்குப் புலனாயிற்று. திருவாரூர்த் திருவீதிப் பணிசெய்தமர்ந்த அரசுகள், "குண்டர் முன்னே தொண்டர்க்குத் தொண்டராம் புண்ணியம் நமக்கு உண்டு கொல்லோ?" என்ற திருவுள்ளக் குறிப்புடன் திருவீதிப் பணி செய்தும் பாடியும் வந்த சரிதநிலையினைத் தாம்கண்டு "மார்பாரப் பொழிகண்ணீர்" (1490) என்ற பாட்டினால் ஆசிரியர் நமக்குக் காட்டியருளினார். அது கவிக்கூற்று. அரசுகளின் அகக்கருத்தினால் நைந்த மனம் மார்பார மழைபோலக் கண்ணீர் பெருகுதற்குக் காரணமாயிற்று. இங்குப் பிள்ளையார் காண்பது முதன்மையாக அரசுகளது அகத்தோற்றமாகிய இடையறாத அன்புக் காட்சியேயாதலின் அதனை முதலில் வைத்துக் கூறினார். இக்கருத்தையும் இதன் பெருமையினையும் குறித்தே எமது மாதவச் சிவஞான முனிவர் "இடையறாப் பேரன்பு" என்று கூறியருளியதும் காண்க. "விருப்புறு மேனி கண்ணீர் வெண்ணீற்று வண்ட லாட" (1436) என்ற நிலை; "கண்ணப்பர் தாமறிதல் காளத்தி யாரறிதல், அல்லதுமற் றியாமறியு மன்பன் றது" என்றதுபோது, அருட்பெருங் கூத்தரும் அரசுகளுமே அறிய நின்றதாதலின் அதுபற்றி ஈண்டெடுத்துக் கூறவியலாதென்க. |
இடையறா அன்பு - எக்காலத்தும் மறத்தலின்றி தொடர்ந்து செல்லும் அன்பு. "இடையறா வன்பெனக்கு, வாழிநின் பாத மலர்க்கே மருவ வருளுகண்டாய்" (கோயி - விருத் - 37) என்று நம்பியாண்டார் நம்பிகள் அருளியதும், "மறக்குமா |