|
றிலாத வென்னை மையல் செய்திம் மண்ணின்மேற், பிறக்குமாறு காட்டினாய் (தேவா) "பண்டு திருவடி மறவாப் பான்மையோர்" (1953) என்பனவும் காண்க. |
திருமேனி தன்னில் அசைவு - மேனியசைதல் அன்பு மீதூர்தலின் மெய்ப்பாடு "ஆகம் விண்டுகம்பம் வந்து குஞ்சி யஞ்ச லிக்கணே, யாக வென்கை கண்க டான யாற தாக" (திருவா). |
கந்தை மிகையாம் கருத்து - கந்தை - மேல் உடையாகிய ஒற்றைத்துணி. "கந்தை கீளுடை கோவணங் கருத்தறிந்துதவி" (504); மிகையாங்கருத்தாவது கந்தையும் வேண்டப்படுவதின்று என்ற துறவாகிய மனநிலை; இழிவு சிறப்பும்மை தொக்கது. கந்தம் மிகையாம் - என்று பாடமோதிக், கந்தம் - உலகப் பற்றாகிய வாதனை என்பாருமுண்டு. கந்தம் - இந்திரியங்களால் உணரப்படும் விடயத்தொகுதிகள்; மிகையாம் - குற்றமாம் என்பது ஆறுமுகத் தம்பிரானாருரை. திருமேனி தன்னிலசையும் கந்தை - என்று பாடங்கொண்டு மேனியிற் கொண்ட என்பாருமுண்டு. |
கை - கையினிடத்து; ஏழனுருபு தொக்கது. |
கண் வந்து இழிநீர் - என்க. அன்பு மீதூர்தல் காரணமாகவந்து மேல் வழிகின்ற கண்ணீர். |
திருநீறு - திலகவதியாரால் அளிக்கப்பட்டு உருவார அணிந்த அன்று முதல் இடைவிடாது அணிந்து கொண்ட திருநீறு. |
பொலிதல் - நாயனாரது திருமேனியில் விளக்கம் பெறுதல். |
அந்தமிலாத் திருவேடம் - இறைவரது திருவேடமாதலின் அழிவிலாத - என்றார். "தன்னுணர வேண்டித் தனதுருவைத் தான்கொடுத்துத், தன்னுணரத்தன்னு ளிருத்தலால் - தன்னுணரு, நேசத்தார் தம்பா னிகழுந் ததிநெய்போல்" (போதம் 12) என்பதும், அச்சூத்திரத்தின்கீழ் எமது மாதவச் சிவஞான முனிவர்" திருவேடத்தியல்பு பற்றி உரைத்தவையும், முன்னர்த் "தூயவெண்ணீறு" (1405) என்ற திருப்பாட்டின்கீழ் உரைத்தவையும் காண்க. "ஆதியந் தம்மிலா வடிகள்வே டங்களே" (தேவா); இறைவரது வேடமே இவ்வரசுகள் என்பார் வேடத்தரசு என்றார். |
270 |
2169. (வி-ரை.) கருத்தில் பரவும் மெய்க்காதல் தொண்டர் திருவேடம் நேரே தோன்றியது என்று - பிள்யைார் பத்தரது திருவேடத்தையும் சிவாலயத்தைப் போன்று பரமேசுரனெனவே கண்டு வழிபடும் கருத்துடையார் என்பது (போதம் 12); திருவேடம் நேரே தோன்றியது என்றது திருவேடம் என்ற இலக்கணங்களெல்லாம் உருப்பெற்று இலக்கியமாகத் தம் கண்முன் நேர்தோன்றியது என்றதாம். அரசுகளைப் பிள்ளையார் அரசுகளுடைய உருவம் என்று காணாது தொண்டர் திருவேடத் தன்மையின் தொகுதி என்று கண்டார் என்க. 1445 - ம் பார்க்க. |
தொழுதே - அணைந்து - தொழுது கொண்டபடியே வந்து; "தொழுதெழுவாள்" (குறள்). |
அண்டரும்போற்ற - திருவேடத்தின் பெருமையினை ஆசாரியராகப் பிள்ளையார் உணர்த்த அண்டர்களும் உணர்ந்து உய்ய என்றதனால் ஏனையோர் உணர்ந்தது தானே பெறப்படும் என்க. |
அணைந்து அருள் செய்தார் - என்று முடிக்க. பிள்ளையார் தொழுதே அணைந்தாராக அவ்வேளையில் அரசுகளும் வந்திறைஞ்ச என்க. |
மண்டுதல் - மிகுதி பெறக்கூடுதல் |
மதுரமொழி - வரவேற்றலாகிய இன்மொழி. |
271 |