|
திருவமுதினை ஆக்குவித்து ஏற்ற இயல்பினாற் பொருந்தும்படி அன்பால் அமுது செய்வித்தருளி; புணரும்........கும்பிட்டு - பொருந்தியதனாற் பெருகிய அன்பும் நண்பும் மேலும் அதிகரித்த காதலினாலே கும்பிட்டு; உணரும்......உறைந்தார் - சிவனை உணர்ச்சியிற் கண்டு சொல்லும் திருப்பதிகங்களைச் சாத்தி மகிழ்ச்சி பொருந்தி உடன் உறைந்தார்கள். |
(வி-ரை.) இப்பாட்டு - முன் அரசுகளது புராணத்தினுள் "பிள்ளையார்தந் திருமடத்திலெழுந் தருளியமுது செய்து, மருவியநண் புறுகேண்மை யற்றைநாள் போல் வளர்ந்தோங்க வுடன்பலநாள் வைகுநாளில்" (1452) என்றுரைத்ததனைப் பிள்ளையாரது செயல்பற்றி விரிக்கின்றது. ஆண்டுரைத்தவை பார்க்க. |
அணையும் - அரசுகளோடு உடன் அணையும் என்றும், மேலும் இருவருங் கூடிய மகிழ்ச்சி கண்டு களிக்க அணையும் என்றும் உரைக்க நின்றது. |
இணையில் - இணையில்லாத பெருமையுடையார்க்குச் செய்விக்கும் அமுதாதலின் இணையில் திருவமுது என்றார். |
ஆக்கி - ஆக்குவித்து. பிறவினைப் பொருளில் வந்தது. |
இயல்பால் அமுது செய்வித்தலாவது - அவர் பெருமைக்கு ஏற்ற இயல்பினால் உண்பிப்பது. "அரசர்க் கமைத்த சிறப்பினுமே லடியார்க் கேற்கும் படியாக" (கழறிற். புரா - 73). அவ்வர்க்கேற்ற இடத்தில் அமைத்து என்ற குறிப்புமாம். |
புணரும் பெருகு அன்பும் நண்பும் பொங்கிய காதல் - புணரும் - முன் உணர்ச்சியினாற் புணர்ந்ததன் பயனாக உளதாகிய. புணர்தல் - ஈண்டு அடியார் உடன் உறையும் பேரின்பநிலை குறித்தது. அன்புடைமையும் நண்புடைமையும் வெவ்வேறு நிலைகள். அன்பு முற்றி நண்பாக விளையும்; அது மேலும் முதிரக் காதலாக முதிரும். இந்நிலைகள் உலக வழக்கில் சிற்றின்பச் சார்புபற்றி வழங்குதல் உபசாரம். அன்பு - இறைவனிடத்தும், நண்பு - அதனால் இவ்விரு பெருமக்கள் பாலும் நிகழ்ந்தன என்பதுமொன்று. "புணர்ச்சி பழகுதல் வேண்டா" (குறள்). |
உணரும் சொன்மாலைகள் - இறைவரைக் கும்பிட்டு அதனால் விளையும் சிவஞானானந்த அனுபூதி உணர்வு வசப்பட்டுத் தம்வயமின்றி எழும் சொன்மாலைகள். தேவாரத் திருப்பதிகங்கள். |
மகிழ்வெய்தி உடன் உறைந்தார் என்க. உடனாதல் - சைவ சித்தாந்தத்தின் உயர்ந்த மரபுமொழி. "உடனுறைவின் பயன்பெற்றார்" (1509). |
கும்பிட்டு - இவ்வாறு ஒருவரையொருவர் கூடும்படி தந்தருளியதன் பொருட்டுக் கும்பிடுவார் போல என்ற குறிப்புமாம். "வன்றொண்டர் கூட்டம் வைத்தாய்." (வெள் - சருக் - 47). |
எய்தியிருந்தார் - என்பதும் பாடம். |
273 |
2172.அந்நாள் சிலநாள்கள் செல்ல வருட்டிரு நாவுக் கரசர் |
மின்னார் சடையண்ண லெங்கு மேவிடங் கும்பிட வேண்டிப் |
பொன்மார்பின் முந்நூல் புனைந்த புகலிப் பிரானிசை வோடும் |
பின்னாக வெய்த விறைஞ்சிப் பிரியாத நண்பொடும் போந்தார். |
274 |
(இ-ள்.) அந்நாள்.......செல்ல - அவ்வாறுள்ள சில நாட்கள் கழிய; அருள் திருநாவுக்கரசர்.....கும்பிடவேண்டி - சிவனருள் பெற்று விளங்கும் திருநாவுக்கரசுகள் மின்போன்ற சடையினையுடைய இறைவர் எங்கும் பொருந்தி விளங்க வீற்றிருந்தருளியிருக்கும் தானங்களைச் சென்று கும்பிடும் பொருட்டு; பொன் |