பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்317

     2173. (இ-ள்.) வாக்கின் தனிமன்னர் ஏக - ஒப்பற்றதிருநாவுக்கரசர் போந்தனராக; மாறாத் திருவுள்ளத்தோடும்.........புகுந்து - மாறுதலில்லாத திருவுள்ளத்துடனே பூக்கள் மணங்கமழும் வயல்கள் சூழ்ந்த சீகாழிப் பதியினுள் மீண்டுவந்து புகுந்து; தேக்கிய......வீற்றிருந்தாரை - நிறைந்த பெரிய வேதங்களின் மிகுதியின் வடிவாகிய திருத்தோணியில் எழுந்தருளிய இறைவரை : தூக்கின்.......நாளில் - தூக்குடைய இனிய தமிழ் மாலைகளைப் பாடித் தொழுது கொண்டு அங்கு எழுந்தருளியிருக்கின்ற நாளில்,
275
     2174. (இ-ள்.) செந்தமிழ்மாலை விகற்பச் செய்யுட்களால் - விகற்பச் செய்யுட்களாலாகிய செந்தமிழ் மாலைகளாக; மொழி மாற்று - திருமொழிமாற்று என்னும் பதிகமும்; வந்த சொற் சீர் மாலைமாற்று - சொற் சீர்மாற்றி வந்த திருமாலை மாற்றுப் பதிகமும்; வழிமொழி - வழிமொழித் திருவிராகப் பதிகமும்; எல்லாம் மடக்கும் சந்த இயமகம் - எல்லா அடிகளினும் எல்லாச் சீர்களும் மடங்கிவரும் இயமகமாகிய; ஏகபாதம் - திருஏகபாதப் பதிகமும்; தமிழ் இருக்குக்குறள் - தமிழ் சிறந்த திரு இருக்குக்குறள் என்னும் பதிகமும்; சாத்தி - என்ற இவற்றைச் சாத்தியதோடு; எந்தைக்கு எழுகூற்றிருக்கை - எமது தந்தைக்கு அருளிய திருவெழுகூற்றிருக்கையும்; ஈரடி - ஈரடி என்ற திருப்பதிகமும்; ஈரடிமேல் வைப்பு - ஈரடிமேல் வைப்பு என்ற திருப்பதிகமும்,
276
     2175. (இ-ள்.) நாலடி மேல் வைப்பு - நாலடி மேல் வைப்பு என்ற திருப்பதிகமும்; மேன்மை நடையின் முடுகும் இராகம் - மேம்பட்ட முடுகும் நடையிலமைந்த திருவிராகம் என்ற பதிகங்களும்; சால்பினில் சக்கரம் ஆதிவிகற்பங்கள் சாற்றும் பதிகம் - சால்புடைய திருச் சக்கரமாற்று முதலிய திருப்பதிகங்களையும்; மூல இலக்கியமாக எல்லாப் பொருள் கோளும் முற்ற - இவை மூல இலக்கியமாக உலகுக்கு வழிகாட்டியிருக்கும்படி எல்லாப் பொருள் கோள்களும் முற்றிக் காணும்படி; ஞாலத்து........ஞானசம்பந்தர் - உலகத்தில் உயரும் சீகாழி யிறைவரைத் திருஞானசம்பந்தர் பாடியருளினர்.
277
     இந்த மூன்று பாட்டுக்களும், தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
     2173. (வி-ரை.) மாறாத் திருவுள்ளத்தோடு - முன் "பிரியாத நண்பொடும்" (2172) என்றது காண்க.
     புகலியின் மீண்டும் புகுந்து - சீகாழியின் திரு எல்லைப்புறம் போந்து இருபெருமக்களும் விடைகொண்டனர்களாதலின் அவ்விடை நின்று மீண்டும் புகலியிற் புகுந்து என்றார். மீண்டும் - விடைகொண்டு மீளுதல் என்ற குறிப்பும் தருவது. முன்னர் எதிர்கொண்டு அரசுகளையும் உடன்கொண்டு மீண்டமைபோல் இன்று மீண்டும் என உம்மை இறந்தது தழுவியது.
     தேக்கியமாமறை வெள்ளத் திருத்தோணி - தேக்குதல் - பலவாற்றாலும் வந்து திரண்டு கூடுதல். அனந்தமாகிய மறைகளின் பல நெறிகளும் இங்கு வந்து ஒருங்கே கூடுதல் குறிப்பு. "அன்றென்று மாமென்று மாறு சமயங்கள், ஒன்றொடொவ்வா துரைத்தாலும் - என்றும், ஒருதனையே நோக்குவா ருள்ளத்திருக்கும், மருதனையே நோக்கி வரும்" (திருவிடை - மும் - கோ - 17) என்ற பட்டினத்தடிகள் திருவாக்குக் காண்க. வெள்ளம் - மிகுதி; இரட்டுறமொழிதலால் தோணிமிதக்கும் வெள்ளம் (நீர்ப்பெருக்கு) என்ற குறிப்பும் தருவது.
     தூக்கின் தமிழ்மாலை - தூக்கு செய்யுள்; இரட்டுற மொழிதலால் இசைத் தமிழின் பகுதியாகிய ஏழுவகைத் தூக்குக்களின் அமைதியும் குறிக்க வைத்தார்.