பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்319

அழுந்திய - தாள விசைகூடுதல். மேன்மை - கதியின் மேம்பாடும் பொருளின் உயர்வும்.
     சக்கரம் - திருச்சக்கரமாற்று. கடைக்குறை.
     மூல இலக்கியமாக - இந்த விகற்பச் செய்யுட்களுக்கு இலக்கணம் காண்போர்க்கு இலக்கியம் இவையே என்று தெளிய. முன்னர் இவற்றுக்கு இலக்கியம் கிடையாத நிலையில் இவையே மூல இலக்கியமாக அமைய என்க. தமிழ் கற்போர் இவற்றையே அவ்வவ் விகற்பச் செய்யுட்களுக்கு இலக்கியமாகக் கொள்ள.
     எல்லாப் பொருள்கோளும் முற்ற - பொருள்கோள் - பொருள் கொள்ளும்முறை. இவை யாற்றுநீர், கொண்டு கூட்டு முதலாக எட்டுவகையா மென்பர்.
     காழியாரை - இத்திருப்பதிகங்களனைத்தும் சீகாழியைப் பற்றியன.
     மோனைநடையின் எல்லாப் பொருள்களுமுற்ற - என்பனவும் பாடங்கள்.
277
2176.இன்னிசை பாடின வெல்லா மியாழ்ப்பெரும் பாணனார் தாமும்
மன்னு மிசைவடி வான மதங்கசூ ளாமணி யாரும்
பன்னிய வேழிசை பற்றிப் பாடப் பதிகங்கள் பாடிப்
பொன்னின் றிருத்தாளம் பெற்றார் புகலியிற் போற்றி யிருந்தார்.
278
     (இ-ள்.) இன் இசை பாடின எல்லாம் - இனிய இசையில் முன் கூறியவாறு பாடிய எல்லாப் பதிகங்களையும்; யாழ்ப் பெரும்பாணனார் தாமும்.......பாட - பெரும் யாழ்ப்பாணனாரும் பொருந்திய இசையொரு உருவெடுத்தாற் போன்ற மதங்கசூளாமணியாரும் போற்றப்படும் ஏழிசைகளைப்பற்றிப் பாட; பதிகங்கள் பாடி - திருப்பதிகங்களைப் பாடி; போற்றி - சிவபிரானைத் துதித்துக் கொண்டு பொன்னின் - திருத்தாளம் பெற்றார் - திருப்பொற்றாளம் பெற்ற பிள்ளையார்; புகலியில் இருந்தார் - சீகாழியிலே எழுந்தருளியிருந்தனர்.
     (வி-ரை.) பாடின எல்லாம் - முன் கூறியவாறு பாடிய விகற்பச் சந்தச் செய்யுட்கள் எல்லாவற்றையும்.
     இரைவடிவான - இசையே இவரது திருவுருவம் என்று சொல்லத்தக்க; முழுதும் இசைமயமான.
     பன்னியஏழிசைபற்றிப்பாட - "பன்னியாதரித் தேத்தியும் பாடியும்" (தேவா); பாணனார் தாமும் - மதங்க சூளாமணியாரும் பாட - கலத்தினும் அதனோடியையைக் கண்டத்திலுமாகப்பாட. பன்னிய - ஏழிசைபற்றி என்றதில் பன்னுதல் - ஏழிசைகளுள் ஒன்றும் பலவும் விரவ என்ற குறிப்பும் தருவது. பற்றுதலாவது இசையுடன் சொல்லும் பொருளும் பொருந்துதல்.
     பாடப் பாடி - பின்றொடர்ந்து பாடும்படி பாடியருளி.
     பொன்னின் திருத்தாளம் பெற்றார் - பிள்ளையாரை இத்தன்மையாற்கூறியது அவர்கள் பாடத் தாம் பாடியருளியதுடன் இவை திருத்தாளத்தினாலிசைய ஒத்தியருளினர் என்று குறிப்பித்தற்கு.
     போற்றி - இறைவரைத் துதித்துக்கொண்டு. "வாழ்த்த வாயும்" என்றபடி மக்கள் வாழ்த்தலெல்லாம் போற்றுதற்கென்றேயாம் என்று உலகறியும்படி போற்றி என்க.
     இந்நான்கு பாட்டாலும், அரசுகள் போந்தபின்னரும், தமது திருவவதாரப் பயன்தரும் ஐந்தாவது தலயாத்திரை தொடங்குமுன்னும், சீகாழியில் எழுந்தருளியிருந்த இடைநாட்களின் சரித நிகழ்ச்சிகள் கூறப்பட்டன.
278