பக்கம் எண் :

334திருஞானசம்பந்தநாயனார் புராணம்

நோன்பியற்றும் சமணர். பெருங்கோயில் - தோணி.-(11) விண்ணவரடி தொழு - தேவர்கள் தாங்கி நிற்க என்ற குறிப்பு. இடராயின........தவநெறியே - 2 - 3 பார்க்க.
திருச்சண்பை நகர்
திருச்சிற்றம்பலம்                     திருவிராகம் பண் - சாதாரி
எந்தமது சிந்தைபிரி யாதபெரு மானென விறைஞ்சி யிமையோர்
வந்துதுதி செய்யவளர் தூபமொடு தீபமலி வாய்மையதனா
லந்தியமர் சந்திபல வர்ச்சனைகள் செய்யவமர் கின்றவழகன்
சந்தமலி குந்தனநன் மாதினொடு மேவுபதி சண்பைநகரே.
(1)
வாரின்மலி கொங்கையுமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்தமருமூர்
சாரின்முர றெண்கடல் விசும்புற முழங்கொலிகொள் சண்பைநகர்மேற்
பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ் ஞானசம் பந்தனுரைசெய்
சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வார்சிவ லோகநெறியே.
(11)
திருச்சிற்றம்பலம்
     பதிகக் குறிப்பு :- "மேன்மை நடையின் முடுகும் இராகம்" (2175) என்று ஆசிரியர் அறிவித்தபடி முடுகிய சந்தத்திசையிற் செல்ல அமைந்தது இத்திருப்பதிகம். அழகராகிய பெருமான் மாதினொடு மிருந்தபதி சண்பைநகரே என்பது குறிப்பு.
     பதிகப்பாட்டுக் குறிப்பு :- (1) "எந்தமது......பெருமான்" என - இது விண்ணோர்துதிப்பது. சூரனுக்கஞ்சிய இந்திரன் புகலடைந்த குறிப்புமாம் - குந்தளம் - கூந்தல்; - (2) விரிதுத்தி - விரிகின்ற படம்; - (3) போழும்; பிளந்தது போன்ற; மாழை - மாவடு; "மாவடு வகிரன்ன கண்ணிபங்கர்" (திருவா); தாழை முகிழ் - தாழையின் மொட்டு; வேழமிகு தந்தம் என - யானைக் கொம்புபோல; "முள்ளிலைத் தாழை பெருங்களிற்று மருப்பினன்ன - (நற்றி - 19) - (4) மட்டு - மணம்; தேன் என்றலுமாம்; மதிதட்டுபொழில் - மதியைத் தடவும்படி உயர்ந்தசோலை; சட்டகலை - ஆறங்கம்; எட்டுமரு எட்டும் - 64 கலைஞானங்கள்; (6) அணவு - அணுகிவந்த; நீலம் - நீலோற்பல மலர்; - (7) விண்பொய்....ஒழியினும் - வானம் பிழைத்தல்; "விண்ணின்று பொய்ப்பின்" (குறள்) மண்பொய் - மண்ணுலகின் நல்லொழுக்கத்தவறு; இவை பருவ மழை விழாமைக்கும் விளைவுக்குறைவுக்கும் காரணமா மென்றது. வண்மை வழுவார் - உலகம் வறண்ட காலத்தும் காழிப்பதியவர் வள்ளற்றன்மை குறையார்; "ஒருநாளுங் கரவா வண்கைக் கற்றவர் (குறிஞ்சி - காழி - 1) - அதுவே அடியார் தன்மை என்க. அவ்வாறு வழுவாதிருத்தல் அடியாராந் தன்மையால் வருவது என்றபடி; பின்னர்ப் பிள்ளையார் இறைவன்பாற் பெற்ற உலவாக்கிழிகொண்டு திருக்கழுமலத்து வேதவேதியரனைவரும் வேள்வி செய்யவு மிகுந்திருக்கும் வரலாற்றை இங்கு நினைவுகூர்க.-(8) மறுக்கம் - அச்சம்; உரம் - மார்பு; ஏழ் - ஏழும்; - (9) பறவை - அன்னம்; மாலு மலார்னும் - முறையே கேழலுரு - நீள்பறவையும் ஆக என்று நிரனிறை; வரதன் - தீயுருவாகிய அறியப்படாத நிலையினின்றும் பின் வெளிப்பட்டு வரமும் தந்தவன் என்பது குறிப்பு :- (10) போதியர் - போதியடியில் அமர்ந்தவனது சமயத்தினர் (புத்தர்); பிண்டியர் - அசோகினடியில் அமர்ந்த அருகனது சமயத்தினர் (சமணர்). போது வழுவாதவகை - காலந்தவறாது. நாட்காலையில்; திரை - மணி - எறி என்க.