கால வினையெச்சம் செய்து என்னும் பொருளில் வந்தது. அறிவுடையனாய்ப் பிறப்பினை யஞ்சி வீடு பேற்றின் பொருட்டுத் துறந்தானுக்குரிய அறத்தை மேற்கொண்டுளனாதலின், 'நல்முனிவன்' என்றார். பனித்து - நீர் துளித்து. நனி - மிகுதி. 7. இந்திரசாலமாவது மந்திரம் மருந்து முதலியவற்றால் ஒன்றினை மற்றொன்றாக் காட்டுதலாம். இந்திரசாலம் (Black Magic)செய்வோன் தன் வித்தையைக் காட்ட மேடையில் இட்ட திரைச்சீலையைப் போல் எட்டுத் திசையிலும் இருள் பரவியது என்பதாம், நகை - சிரிப்பு:தொழிற் பெயர் விகுதி. இழைக்க - செய்ய. அந்தரம் - ஆகாயம். அறை - தெரிவி. 8. அன்றில் என்பது ஒரு பறவை. அஃது எப்பொழுதும் ஆணும் பெண்ணுமாக இணைபிரியாது நிற்கும். இரவில் கணப்பொழுது ஒன்றைவிட்டு ஒன்று பிரிய நேர்ந்தக்கால் அத்துன்பந் தாழாது இரண்டு மூன்று முறை கத்திக் கூவியும் தன் துணையைக் கூடாவிடின் உடனே இறந்து படும் என்பது கலி மரபு. அன்றில் வடமொழியிற் கிரௌஞ்சம் என்றும், தமிழில் குருகு என்றும் வழங்கப்பெறும். ஆண் அன்றிற் பறவை 'அகன்றில்' என வழங்கும். இணை - இரண்டு. பிரிய - பிரிதலால் என்பது பிரிய எனத்திரிந்தது. இணை, இணைதல், முதனிலைத் தொழிற்பெயர். இணைபிரிய - இணை தலினின்றும் நீங்க. இடையிடையே - அடுக்குத்தொடர். இவ்விருவருடைய அன்பின் நிலையை எவர் அறிபவர் என்று தெரிவித்தல்போல மரங்கள் கண்ணீர் சொரிவன என்க. கண்ணீர் என்பதற்கு உவமானப் பொருள் கொள்ளும்போது கள்நீர் எனப் பிரித்துத் தேனாகிய நீர் எனவும் உவமேயப்பொருள் கொள்ளும் போது கண்நீர் எனப் பிரித்துக் கண்ணினின்று வரும் நீர் எனவும் இரட்டுற மொழிக. அவ்வாறே, அகமுடைந்து என்பதற்கு உவமானப் பொருள் கொள்ளும்போது பூவின் அகம் நெகிழ்ந்து எனவும், உவமேயப்பொருள் கொள்ளும்போது உளம் வருந்தி எனவும் இரட்டுற மொழிக. மரங்கள் தங்கள் பூக்களிலிருந்து தேனைச் சொரிதலானது இணைபிரிந்த அன்றிற் பறவைகளின் கூவுதலைக் கேட்டுக் கண்ணீர் விட்டு அழுதல் போன்றிருக்கிறது என்று ஆசிரியர் கூறுகின்றார். என்பு - எலும்பு. அகம் - உள். தூவ - சொரிய. 9. சால வித்தையாகிய வேடிக்கையைத் தெரி்வித்து ஆங்காங்குள்ளவர்களை அழைப்பவர்போல வௌவாற் பறவைகள் அக்காடு முழுதும் இரவில் அங்கு மிங்குமாய்த் திரிந்தன என்பார், 'விந்தை நடப்பது தெரிக்க விளிப்பவரின் வாவல் விரைந்தலைய' என்றார். இருள்செறிந்த அக்காட்டில் அழைப்பவரது பின்னே விளக்கேந்திச் செல்பவனைப்போல, 'மின் மினியும் விளக்கொடு பின்னாட' என்றார். மின்மினியும் விளக்கொடு பின்னாட - மின்மினிப் பூச்சியும் ஒளியுடன் பறக்கவும் எனலும் ஆம். விளிப்பவரில் என்பதில் இல் ஐந்தனுருபு ஒப்புப் பொருளது. விந்தை- வித்தை. அந்தி - மாலைப்பொழுது, இறு - தங்கு. 10. இருள் சூழ்ந்த அக்காட்டில் (பாம்பின் சுடிகையிலுள்ள மாணிக்கத்தின்) நாகரத்தின ஒளியும், யானைக் கொம்பின் ஒளியும், புலியினது கண்ணின் ஒளியும், அன்றி வேறு எவ்வித ஒளியும் இல்லை என்பதாம். கறையடி - யானை; அன்மொழி, கறை - உரல். உரல் போன்ற அடியை யுடையது
|