மலடி' என்றார். சிவகாமியின் சிற்றன்னை மலடியாயினும் ஈடு எடுப்பற்ற செல்வமுடையாள் என்பார், 'செகமனைத்தும் அவள் படைத்த செல்வமென மொழிவர்' என்றார். செப்பரிய - சொல்லற்கரிய. 32. ஒருவனது நிழல் தன்னைப் பிரியினும் அவனை விடாது வந்து அடியினிடத்தே தங்குந் தன்மை போலச் சிறிதுநேரம் அவரைப் பிரியினும் சகியாது அவரைத்தேடியுடன் கூட விளையாடி யொன்றாக வளர்ந்தேன் எனத் தன் இளமைப் பருவத்தின் செய்தியைக் கூறினாள் என்க. அறைவேனோ என்புழி ஓ வினாவொடு எதிர்மறை. அடல் - வலிமை. அலகு - அளவு. 33. எடுத்தனள் முன் தொடுத்து என்பதை முன் எடுத்துத் தொடுத்தனள் என விகுதி பிரித்துக் கூட்டிஅம் முனிவன் முன்னே விரிவாக எடுத்துச் சொல்லத் தொடங்கினள் எனப் பொருள் கோடலும் ஒன்று. பிடி - பெட்டையானை. 34. சிறிதாய் எனக்குக் கொடுத்த செல்வத்தால் மதிமயங்கித் தலைதடுமாறி என்நிலைமையையும் எனது தலைவனது தன்மையையும் தகைமையையும் மறந்தேன் என்க. படிறு - வஞ்சகம். தகைமை என்றது கல்வி, அறிவு, அன்பு, அருள், அழகு முதலிய குணங்களை. மடமகள் - இளம்பெண். தமியன் - தனித்தவன். 35. அத்தலைவர் குறிப்பு மொழியால் உணர்த்தியும் என் குறும்பு மதியால் கொள்ளாது விடுத்தனன் என்க. குறிப்பு, வெளிப்படை என மொழிகள் இரண்டு வகைப்படும். குறிப்புச் சொற்கள் பொருளைக் குறிப்பால் உணர்த்துவன.அவை ஒன்றொழி பொதுச்சொல், விகாரம் முதலாயின. குறும்பு - பொல்லாங்கு. 36. அதிபர் அவர் - அதிபராகிய அவர்;இருபெயர் ஒட்டுப் பண்புத்தொகை. அயர்ந்திருந்தேன் - அயர்ந்தேன்;ஒருசொன்னீர்மைத்து. அரும்பி - உதி்த்து. 37. காணேன் - எதிர்மறைத்தன்மை யொருமை வினைமுற்று, காண் - பகுதி, ஏன் - தன்மை யொருமை வினைமுற்று விகுதி, ஆ - எதிர்மறை விகுதி புணர்ந்து கெட்டது. இனி, எதிர்மறை விகுதி புணர்ந்து கெடாமல், விகுதியின் ற்காரமே எதிர்மறையை யுணர்த்தி று என்பர் சேனாவரையர். என் ஆராமையைத் தோழியர்களிடத்து முறையிட, அவர்கள் யான் செல்வச் செருக்கினால் வெறுத்த தலைவரைக் குறித்து இதுபொழுது வருந்துதலால் என் அறியாமையைக் கண்டு பரிகசித்தனர் என்க. உன்னி - நினைந்து, சேடியர் - தோழியர், தேயம் - இடம். 38. ஆயத்தார் - மகளிர் கூட்டத்தினர். தான் அசை. விரக வேதனை யுடையார்க்குக் கடலொலி துன்பத்தைச் செய்யுமாதலின், 'அவ்வேலை - அகோராத்திரம் கெடுத்து எறியும்' என்றார். வேலை - கடல் (ஆகுபெயர்), வேலை - கரை;சினைப்பெயராகிய இது முதற்பெயராகிய கடலுக்கு வந்தமையால் சினையாகு பெயர். எறியும் - செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று;இது காரணத்தைக் காரியமாக வுபசரித்தல். காதலுடையாரைச் சந்திரனும் தென்றலும் வருந்துமாதலான், 'நமக் உயிர் தின்னும்' என்றார். மதியும் காலும் என்புழி உம்மை எண்ணும்மை. உமிழ்தல் - கக்குதல். மதி-சந்திரன், கால் - காற்று. திரிந்துலவுங்கால் என்றதனால் தென்றற் காற்றை யுணர்த்திற்று. தென்றற் காற்று மெல்லிய நடையும் குளிர்ச்சியும் நறுமணமும் உடைமை
|