பக்கம் எண் :

174
தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் சில முக்கிய குறிப்புகளும்.

இவை யாவற்றையும் நாம் கவனிக்கையில் இற்றைக்கு 1,000-வருஷங்களுக்கு முன்னும் அதற்கு பல ஆயிர வருஷங்களுக்கு முன்னேயும் சங்கீதமும் பரதமும் தென்னிந்தியாவில் மிக விஸ்தாரமாக உன்னத நிலைபெற்றிருந்த தென்று நாம் அறிகிறோம். பாண்டியராஜ்யத்தில் முச்சங்கங்களிருந்த காலத்தில் சங்கீதத்தைப்பற்றிய விஷயங்கள் யாவும் பாஷையின் ஒருபகுதியாக பிரதானங்கொண்டு வழங்கிவந்த தென்று நாம் இதன்முன் பார்த்தோம். இது தமிழ் நாட்டில்சுமார் 12,000 வருஷங்களுக்கு முன்னிருந்தே பழக்கமுள்ள தென்றும் பாஷையின் ஓர்பாகமென்றும் தென்மதுரை நாடு அல்லது லெமூரியா அழிந்த காலத்தில் பல இடங்களுக்குப் பரவியதென்றும் தென்மதுரையிலுள்ளோர் சங்கீத சாஸ்திரங்களை இழந்தபின் தங்களுக்குப் பழக்கமாயிருக்கிற உருப்படிகளை பரம்பரையாய் பின்னடியாருக்கு போதித்து வந்தாரென்றும் அதுவே தென்னிந்திய சங்கீதம் மேன்மையுடையதென்று கொண்டாடுவதற்கு காரணமாய் நாளது வரையிருக்கிறதென்றும் நாம் அறியவேண்டும். சோழமண்டலத்தின் முக்கிய தேவாலயங்களில் போலவே மதுரை, திருச்செந்தூர், திருநெல்வேலி, ஆழ்வார்திருநகரி, சங்கரநாயனார்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி முதலிய இடங்களிலுள்ள கோயில்களிலும் சங்கீத வகுப்பார் ஏற்பட்டிருக்கிறார்கள். அவ்வாலயங்கள் ஒவ்வொன்றையும் எடுத்துச்சொல்ல இங்கு அவசியமில்லை. இதுவேபோதுமென்று நினைக்கிறேன்.

5. தென்னிந்திய சங்கீதத்தில் தேர்ந்த வித்வ சிரோமணிகள் பெயரும் 

சில முக்கிய குறிப்புகளும்.

பொன்னிலும் சிறந்ததாக பூர்வத்துள்ளோர் போற்றிவந்த இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழையும் கடைச்சங்க காலம்வரையும் அதாவது கி. பி. முதலாம் நூற்றாண்டு வரையும் பாண்டிய ராஜர்கள் ஆதரித்துவந்தார்களென்றும் அதன்பின் தமிழை விசாரிக்கும் ஊக்கங் குறைந்ததென்றும் இதன்முன் பார்த்திருக்கிறோம். அக்காலம்முதல் அதாவது கி. பி. 50-ம் வருஷம் முதல் சோழராஜ்யத்தை ஆண்டுகொண்டிருந்த கரிகால்சோழன் தமிழ்வித்வான்களையும் வித்வசிரோமணிகளான பெண்களையும் ஆதரித்து பலசன்மானங்கள் செய்து புலவர்கூட்டங்களை விருத்திசெய்தாரென்று காண்கிறோம். அவர்காலத்தில் இயல் இசை நாடகமென்னும் முத்தமிழும் தெரிந்தபலர் பற்பல இடங்களிலுமிருந்து அங்குவந்து சேர்ந்தார்களென்று தோன்றுகிறது. சோழராஜாக்கள் சேரராஜ்யத்தையும் பாண்டியராஜ்யத்தையும் இலங்கைதிதீவுகளையும் தெலுங்கு நாட்டையும் அடிக்கடி தங்கள் அரசாட்சிக்குட்படுத்தினார்களென்றும் பார்த்தோம். இதுகாரணத்தினாலும் பல வித்வசிரோமணிகள் சோழராஜ்யத்தில் வந்து தங்கியிருக்கலாம். இதன்பின் மும்முடிச் சோழன் என்று அழைக்கப்பட்ட ராஜகேசரிவர்மன் ராஜராஜ சோழன் 1013-ம் வருஷத்தில் தஞ்சாவூர் பெரியகோயில் கட்டிமுடித்திருக்கிறாரென்று தெரிகிறது. விஜயாலயன் என்னும் சோழராஜன் காஞ்சிபுரத்திலிருந்து வந்து தஞ்சாவூரை ஜெயித்து கி. பி. 846-880 ஆண்டுகொண்டிருந்தாரென்று சொல்லியிருந்தாலும் ராஜராஜசோழன்காலம் முதற்கொண்டே தஞ்சைநகரம் சோழராஜ்யத்தின் முக்கியபட்டணமாக விளங்கிற்றென்று தோன்றுகிறது. அதுமுதல் தஞ்சைமாநகரம் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ் தேர்ந்தோருக்கு உறைவிடமாயிற்று. அவருக்குப்பின் ராஜேந்திரசோழன் என்னும் குலோத்துங்க சோழன் காலத்திலும் அதாவது கி. பி. 1084-இலும் அதற்குப்பின் இரண்டாவது குலோத்துங்கன் காலமாகிய கி. பி. 1135 இலும் அநேக தமிழ்வித்வசிரோமணிகளிருந்ததாகத் தெரிகிறது. முதல் குலோத்துங்கன் காலத்தில் கவிச்சக்கிரவர்த்தி ஜெயங்கொண்டான் என்பவரும் இரண்டாவது குலோத்துங்கன் காலத்தில் ஒட்டக்கூத்தருமிருந்ததாகத் தெரிகிறது..