இரண்டாவது ராஜாதிராஜ சோழன்காலத்தில் (1164-1178) கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, அடியார்க்கு நல்லார் முதலிய வித்வசிரோமணிகள் இருந்ததாகத் தெரிகிறது. அதற்குப்பின் சோழராஜ்யத்தின் விஸ்தீரணமும் செல்வாக்கும் குறைந்தன. பலர் ஒருவர் பின் ஒருவராக சொற்பகாலம் ஆளுகை செய்தார்கள். அதினால் பிரபல வித்வான்களுடைய கூட்டமும் கலைந்ததென்று தோன்றுகிறது. மேலும் தெலுங்குபாஷை பேசுவோரும் மகாராஷ்டிரபாஷை பேசுவோரும் சோழமண்டலத்துக்கு அரசர்களாய் வந்தார்கள். அச்சுதப்பநாயக்கர் காலத்தில் (1572-1614) இயல் இசை நாடகமென்னும் முத்தமிழில் இசைத்தமிழாகிய சங்கீதத்தை மாத்திரம் வேங்கடமகி கவனித்ததாகத் தெரிகிறது. 1763-1787 வரையும் ஆண்டுகொண்டிருந்த துளஜாஜிமகாராஜா காலத்தில் இசைத்தமிழில் தேர்ந்த பல வித்வான்களை வரவழைத்து ஆதரித்து விருத்திசெய்தாரென்று தெரிகிறது. இவர் காலத்தில் தாம் திருநெல்வேலியிலிருந்து வரவழைத்த செந்தில்வேல் அண்ணாவி மகன் மகாதேவ அண்ணாவிக்கும் மற்றும் சங்கீதவித்வான் களுக்கும் சோழராஜ்யத்தின் செழிப்புள்ள இடங்களில் 10 வேலி, 5 வேலி, 2 வேலி, 1 வேலி ஆக அநேக மானியங்கள் அளித்தும் வீடுகள் கட்டிக்கொடுத்தும் விருத்திக்குகொண்டுவந்திருக்கிறார். இவர் காலத்தில் இவர் மகன் சரபோஜி மகாராஜகாலத்திலும் பிரபலமான சங்கீத வித்வான்கள் சோழராஜ்யத்தில் தோன்றியிருக்கிறார்கள். சோழராஜ்யத்தில் தற்காலம் ராஜ ஆதரவு குறைந்ததின் நிமித்தம் சங்கீதத்தினுடைய விருத்தியும் ஒருவாறு குறைந்ததென்றே சொல்லவேண்டும். மேலும் வாய்ப்பாட்டு பாடுவதிலிருக்கும் சங்கீத நுட்பங்களும் பெருமை பொருந்திய சில கிரமங்களும் கேட்பாருகவனிப்பாருமற்று கதையாய் முடிந்தது தற்காலம் கதைப்பாட்டாயிருப்பது பின் எப்படி முடியுமோ அறியோம்.இருந்தாலும் விவரம் தெரியக்கூடிய சில சங்கீதவித்வான்களைப்பற்றி இங்கு பார்ப்பது நலமென்று தோன்றுகிறது. இவர்களில் சிலருக்கு இந்தியாவின் வழக்கம்போல நிச்சயமான காலம் சொல்லப்படவில்லை.சில முக்கியமான புஸ்தகங்களை பழமையானதென்று சிலர் வாங்கமாட்டார்களென நினைத்து அவற்றில் வருஷம் போடாமல் விட்டுவிடுகிறது போல தங்களை மிகப்பூர்வ காலத்திலுள்ளவர்கள் என்று நினைக்கும்படி திட்டமானகாலம் சொல்லுகிறதில்லை. இருந்தாலும் அக்காலத்திலிருந்த ராஜாக்களைக் கொண்டும் சில பெரிய வித்வான்களைக்கொண்டும் தெரியக்கூடிய காலம் சொல்லப்பட்டிருக்கிறது. 'தற்காலமிருக்கிறார்' என்பதை 1914-இல் இருக்கிறார் என வைத்துக்கொள்ளவேண்டும். இப்போதிருக்கிறவர்களும் இதன் முன்னிருந்தவர்களுமான சில வித்வசிரோமணிகளின் விவரம் போதுமானபடி இன்னும் கிடைக்கவில்லை.பல ஜில்லாக்களிலும் அங்கங்கே பூர்வந்தொட்டு பரம்பரையாய் வித்வான்களாயிருந்துவரும் நாகசுரக்காரர்களில் மிகுதியானவர் பேர்களையும் இன்னும் விசாரித்துக்கொண்டிருக்கிறோம்.இன்னும் சங்கீதத்தில் தேர்ந்த வித்வான்களுடைய விவரம் கிடைக்கும்பொழுது அவைகளை இரண்டாம் புத்தகத்தில் சேர்த்து வெளியிடுவோம்.அதோடு இங்கே குறிப்பிட்ட வித்வசிரோமணிகளைப்பற்றி திட்டமான காலமும் மற்றும் குறிப்பிடக்கூடிய விஷங்களும் தெரியப்படுத்தினால் இத்துடன் சேர்த்துக் கொள்ளுவோம்.
|