பக்கம் எண் :
 

 204                                   யாப்பருங்கல விருத்தி

     ‘அசையினும் சீரினும் அடிதொறும் இறுதியை
     முந்தா இசைப்பினஃ தந்தாதித் தொடையே’,

 எனவும் பிறரும் கூறினார் ஆகலின்;

     ‘பிறநூல் முடிந்தது தானுடம் படுதல்’1

 என்னும் தந்திர உத்தி ஆகலின், இவ்வாறு உரைக்கப்பட்டது எனினும்
 இழுக்காது.

     ‘ஈறு முதலா’ என்றது, ‘இறுதி முதலாக’ என்றவாறு.

 வரலாறு :

[ஆசிரிய இணைக்குறட்டுறை]

     ‘இரங்கு குயின்முழவா இன்னிசையாழ் தேனா
     அரங்கம் அணிபொழிலா ஆடும்போலும் இளவேனில்!
     அரங்கம் அணிபொழிலா ஆடு மாயின்
     மரங்கொல் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்த திளவேனில்’.2

 என்றாற்போலக் கொள்க.

     ஈறு முதலாத் தொடுப்பதந்தாதி என்ப உணர்ந்தி சினோரே’ என்னாது
 ‘ஓதினர் மாதோ’ என்று மிகுத்துச் சொல்ல வேண்டியது என்னை?

     இறுதியடியின் இறுதியும், முதலடியின் முதலும் ஒன்றாய் வருவனவற்றை
 ‘மண்டல அந்தாதி’ என்றும், அவ்வாறு வாராதன வற்றைச் ‘செந்நடை
 அந்தாதி’ என்றும், பல விரவி வருவனவற்றை ‘மயக்கு அந்தாதி’ என்றும்,
 எழுத்து அசை சீர்களால் இடையிட்டு வந்த அடியந்தாதியை ‘இடையிட்ட
 அடியந்தாதி’ என்றும் வழங்குவர் ஒரு சார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு
 வேண்டப்பட்டது.

     அவர் கூறுமாறு: மண்டல எழுத்தந்தாதி, செந்நடை எழுத்தந்தாதி,
 மண்டல அசையந்தாதி, செந்நடை அசையந்தாதி, மண்டலச் சீரந்தாதி,
 செந்நடைச் சீரந்தாதி, மண்டல அடியந்தாதி, செந்நடை அடியந்தாதி,
 மண்டல மயக்கந்தாதி, செந்நடை மயக்கந்தாதி, மண்டல இடையிட்ட
 அடியந்தாதி, செந்நடை இடையிட்ட அடியந்தாதி எனக் கொள்க.


     1. நன். 14, 2. யா. வி. 76 உரைமேற்.