ஆசிரியன் பெருங்கண்ணன். (பி-ம்.) 1. ‘தொடி நெகிழ்ந்தன’; 2. ‘விடுநாளுண்டோ’.
(ப-ரை.) தோழி-, விடர் முகை சிலம்புஉடன் கமழும் -பிளப்பையும் முழைகளையும் உடைய பக்கமலை முழுவதும் மணம் வீசும், அலங்கு குலை காந்தள் நறு தாது - அசைகின்ற கொத்துக்களில் உள்ள காந்தட் பூவின் நறிய தாதை, ஊதும் தும்பி - ஊதுகின்ற தும்பி என்னும் வண்டு, பாம்பு உமிழ்மணியின் தோன்றும் - பாம்பினால் உமிழப்படும் மணியைப் போலத் தோன்றுகின்ற, முந்தூழ் வேலிய - மூங்கிலை வேலியாக உடைய, மலை கிழவோற்கு - மலைகளை உடைய தலைவன் பொருட்டு, தொடி ஞெகிழ்ந்தன - என் வளைகள் நழுவின; தோள் சாயின - என் தோள்கள் மெலிந்தன; விடு நாண் உண்டோ - இனி விடுவதற்குரிய நாணம் உள்ளதோ? அது முன்னரே ஒழிந்தது.