பக்கம் எண் :


450


    "தலைவன் தலைவியைப் பிரியாது உறைகின்றான். எச் செயல் குறித்தும் பிரிந்து செல்வதில்லை. அரசனது ஏவல் கடத்தற் கரிதாதலின் அதன் பொருட்டு மாத்திரம் அரிதிற் சிலகால் வேற்றூர் போவான். போயினும் உடனே மீள்வன்" என்ற கருத்துக்களை இவ்வடிகள் கொண்டுள்ளன.

    மேற்கோளாட்சி 1. சேவல் என்பது காட்டுக் கோழிக்கு வந்தது ( தொல். மரபு. 48, பேர்.); னகர வீறு வேற்றுமைக்கண் அம்முச்சாரியை பெற்று வந்தது (தொல். புள்ளி மயங்கு. 110, ந.)

    மு. செவிலி தலைமகனது நிலைமையும் தலைமகளது நிலைமையும் பார்த்து வந்து நற்றாய்க்குச் சொல்லியது (இறை. 53); தலைவியின் மாண்புகளை அகம்புகல் மரபின் வாயில்கள் தம்முட் கூறியது (தொல். கற்பு. 11, இளம்.); செவிலி நற்றாய்க்கு உவந்துரைத்தல் (தொல். கற்பு. 12, ந.);செவிலி நற்றாய்க்கு இருவர் காதலும் அறிவித்தது (நம்பி. 203.)

    ஒப்புமைப் பகுதி 1.மு. மலைபடு. 510

    2. தண் சிதருறைப்ப: குறுந். 104:2.

    3. புதல் நீர் வாரும் புறவு: குறுந். 98:4, ஒப்பு.

    5. வேந்து விடு தொழில்: தொல். மரபு. 81.

    மு. "தெவ்வர் மேற்செலினும், பெருநெடுந் தோளண்ணல் பேர்ந்தன்றித் தங்கான்", "தேர்மன்ன னேவச்சென் றாலு முனைமிசைச் சேந்தறியா, போர்மன்னு வேலண்ணல் பொன்னெடுந் தேர்பூண் புரவிகளே", "வாரார் கழன்மன்னன் றானே பணிப்பினும் வல்லத்துத் தன்,நேரார் முனையென்றுந் தங்கி யறியா னெடுந்தகையே" (பாண்டிக்.); "நனையகத் தல்கிய நாண்மல ரோதி நயந்துறையும், மனையகத் தல்லிடை வைகுத லாற்றஞ்சை வாணனொன்னார், வினையகத் தல்குதல் செல்லுவ ரேனுமவ் வேந்தர்பொற்றேர், முனையகத் தல்கல்செல் லாதொரு நாளு முகிழ்நகையே" (தஞ்சை. 376.)

(242)
  
(தலைவன் பிரிந்த காலத்தில் தலைவி வருந்தியது கண்டு, "நீ ஆற்றி இருக்க வேண்டும்" என்று வற்புறுத்திய தோழியை நோக்கி, "நான் தலைவனை நினைப்பதனால் ஆற்றாமை மீதூர்கின்றது; இனி நினையேன்" என்று இரங்கித் தலைவி கூறியது.)
 243.   
மானடி யன்ன கவட்டிலை யடும்பின் 
    
தார்மணி யன்ன வொண்பூக் கொழுதி 
    
ஒண்டொடி மகளிர் வண்ட லயரும் 
    
புள்ளிமிழ் பெருங்கடற் சேர்ப்பனை 
5
உள்ளேன் றோழி படீஇயரென் கண்ணே. 

என்பது வன்புறை யெதிர் அழிந்து சொல்லியது (வன்புறை - வற்புறுத்துதல். அழிந்து - இரங்கி.)

நம்பி குட்டுவன்.

    (பி-ம்.) 2. ‘வெண்பூக்’; 4. ‘புள்ளுமிழ்’; 5. ‘படிகியரென்’;