பக்கம் எண் :


452


(தலைவன் இரவுக் குறி வந்து ஒழுகா நின்ற காலத்துக் காப்பு மிகுதியால் தலைவியைக் காணப் பெறாமையின், தோழி அதன் காரணம் கூறி வரைவு கடாயது.)

 244.   
பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத் 
    
துரவுக்களிறு போல்வந் திரவுக்கதவ முயறல் 
    
கேளே மல்லேங் கேட்டனம் பெரும 
    
ஓரி முருங்கப் பீலி சாய 
5
நன்மயில் வலைப்பட் டாங்கியாம் 
    
உயங்குதொறு முயங்கு மறனில் யாயே. 

என்பது இரவுக்குறி வந்தொழுகா நின்ற தலைமகற்குத் தம் காவல் மிகுதியாற் (பி-ம். தாம் காவன் மிகுதியாற்) புறப்பட்டு எதிர்கொள்ளப் பெறாதவழி, பிற்றை (பி-ம். இற்றை) ஞான்று தோழி, "வரைந்து கொளினல்லது இவ்வொழுக லாற்றின் (பி-ம். இவ்வொழுகலாறு) இனிக் கூடல் (பி-ம். கூட) அரிது" என வரைவு கடாயது.

    (பிற்றை ஞான்று - மறுநாள். இவ்வொழுகலாறென்றது களவுஒழுக்கத்தை.)

கண்ணன்.

    (பி-ம்,.) 2. ‘கதவு’; 3. ‘கேட்டனெம்’.

    (ப-ரை.) பெரும - தலைவ, பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து - ஊரில் உள்ளார் பலரும் துயிலும் இருள் செறிந்த இடையிரவின் கண், உரவு களிறு போல் வந்து - வலியைஉடைய களிற்றைப் போல வந்து, இரவு கதவம் முயறல் - இராக் காலத்தே தாழிட்ட கதவைத் திறக்க முயன்றதனால் உண்டான ஒலியை, கேளேம் அல்லேம் - யாம் கேளேம் அல்லேம்; கேட்டனம் - கேட்டேம்; ஓரி முருங்க - தலைக்கொண்டை சிதைய, பீலி சாய - தோகை மெலிய, நல் மயில்வலை பட்டாங்கு - நல்ல மயில் வலையின் கண்ணே அகப் பட்டாற் போல, யாம் உயங்கு தொறும் - யாம் வருந்துந் தோறும், அறன் இல் யாய் - மறமிக்கதாய், முயங்கும் - எம்மைத் தழுவுவாள்; அதனால் நின் குறிப்பறிந்து நின்பால் வர இயலவில்லை.

    (முடிபு) பெரும, கதவம் முயறல் கேளேம் அல்லேம்; கேட்டனம்;யாய் முயங்கும்.

    (கருத்து) காவல் மிகுதியால் நின்னைத் தலைவி காண்டல் அரிதாதலின் வரைந்து கோடலே நலம்.