தமிழ்க் கணினிக் கருவிகள் | தமிழ் இணையக் கல்விக்கழகம் 
தமிழ் இணையக் கல்விக்கழகம்

தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முதன்மை கீற்றுகள்தமிழ்க் கணினிக் கருவிகள்

தமிழ்ச் சமுதாயம் மற்றும் தமிழ்க் கணினி ஆராய்ச்சியாளருக்கும் பயன்படுவதற்காக தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் மென்பொருள்களை உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு, அரசாணை எண் (2D) 26, நாள் 15.10.2015 மூலம் தமிழ்நாடு புதுமை முயற்சிகள் (Tamilnadu Innovative Initiatives scheme)  திட்டத்தின்கீழ் 2015ஆம் ஆண்டிற்காக ரூ. 1.5 கோடி தொகை வழங்கியுள்ளது. இந்நிதி உதவியுடன் 15 மென்பொருள் உருவாக்கும் திட்டங்கள் கண்டறியப்பட்டு திட்டச் செயலாக்கம் நடைபெற்று வருகின்றது.

அதில் தமிழிணையம் ஒருங்குறிமாற்றி மற்றும் தமிழிணையம் ஒருங்குறி  எழுத்துருக்கள் என்ற  2 திட்டங்கள் முடிவுற்று       அத்திட்டங்களை  மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 23.05.2017 அன்று தொடங்கி வைத்தார்.  தற்போது கீழ்க்கண்ட 5 திட்டங்கள் முடிவுற்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.

  1. தமிழிணையம் – சொல் பேசி பதிவிறக்க (.Zip வடிவம்)
  2. தமிழிணையம் – விவசாயத் தகவி http://speech.ssn.edu.in/ agri_home/ welcome.html
  3. தமிழிணையம் – தொல்காப்பியத் தகவல் பெறுவி பதிவிறக்க (.Zip வடிவம்)
  4. தமிழிணையம் – தமிழ்ப் பயிற்றுவி பதிவிறக்க (.Zip வடிவம்)
  5. தமிழிணையம் – நிகழாய்வி http://78.46.86.133:8080/tvademo/     http://78.46.86.133/TVA.apk

1. தமிழிணையம் – சொல் பேசி

கணினிக்கும் மனிதனுக்கும் இடையேயான தகவல் தொடர்பை சொல் பேசி (எழுத்திலிருந்து பேச்சு உருவாக்கி) மேம்படுத்துகிறது. இது தெளிவான மற்றும் இயற்கையான முறையில் பேச்சினை உருவாக்கும். சொல் கண்டறிகை (பேச்சிலிருந்து எழுத்து) உடன் கூடிய சொல் பேசி, மனிதனுக்கும் எந்திரத்திற்கும் இடையே ஒரு பாலமாக அமைந்து, இரு வழி தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகுக்கிறது. இதன் அடிப்படையில் இரண்டு விதமான மென்பொருள்கள், தமிழ் மொழிக்காக உருவாக்கப்பட்டுள்ளன.

சொல் பேசி உலாவி நீட்டிப்பு - இது வலை பக்கத்தில் இருக்கும் தமிழ் உரைகளைப் படிக்க உதவுகிறது. இது, மாற்றுத் திறனாளிகளுக்கும், தமிழை வாசிக்க இயலாதவர்களுக்கும் மிகுந்த பயனாக உள்ளது. மேலும், ஒரே சமயத்தில், உரையைப் பார்த்துக்கொண்டே அதற்கான பேச்சையும் கேட்க முடியும் என்பதால், இதனை நாம் ஒரு மொழி கற்கும் கருவியாகக் கூட பயன்படுத்தலாம். இந்த நீட்டிப்பு சேவை, கூகிள் க்ரோம் மற்றும் மொசில்லா பயர்பாக்ஸுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. காரணம், விண்டோஸ், லினக்ஸ் மற்றும் ஓ. எஸ். எக்ஸ் பயனர்களில் பெரும்பான்மையானோர் இந்த இரண்டு உலாவிகளையே பயன்படுத்துகின்றனர். இது எஸ்.எஸ்.என் பொறியல் ( SSN College of Engineering, Chennai ) கல்லூரியின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

2. தமிழிணையம் – விவசாயத் தகவி

வேளாண்மை சார்ந்த தகவல் அறியும் வலைத்தளம் - இது சொல் பேசி, சொல் கண்டறிகை இரண்டையும் பயன்படுத்துகிறது. வலைத்தளம் சார்ந்த பயன்பாடாக இது இருப்பதால், எந்த நேரத்திலும், பிரதானப் பயிர்களான நெல், கரும்பு மற்றும் ராகி இவைகளை பற்றிய தகவல்களை, பேச்சின் மூலம், மிக இயற்கையான மற்றும் எளிமையான முறைகளில் தெரிந்து கொள்ள முடிகிறது. இது எஸ்.எஸ்.என் பொறியல் (SSN College of Engineering, Chennai) கல்லூரியின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

3. தமிழிணையம் – தொல்காப்பியத் தகவல் பெறுவி

தொல்காப்பிய இலக்கணநூல் 1610 நூற்பாக்களைக் கொண்டுள்ளது. இந்த நூற்பாக்கள் மூன்று அதிகாரங்களாக – எழுத்து அதிகாரம், சொல் அதிகாரம், பொருள் அதிகாரம் என்ற மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அதிகாரத்திலும் ஒன்பது இயல்கள் அடங்கியுள்ளன. தொல்காப்பிய இலக்கணத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள், அவற்றின் வருகை. அவற்றின் இலக்கணக்குறிப்பு ஆகியவைபற்றியும் இந்நூலில் இடம்பெற்றுள்ள கலைச்சொற்கள்பற்றியும்  கணினிவழியே விரைவாக அறிந்துகொள்வதற்கான ஒரு மென்பொருளாக இந்த ஆய்வுத் திட்டம் அமைந்துள்ளது.  மேலும் இம்மென்பொருளில் ஒரு குறிப்பிட்ட சொல்லின் சூழல்சார்  விவரங்கள், புள்ளியியல் ஆய்வுகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. சொல்லடைவும் தரப்பட்டுள்ளது.

இந்த மென்பொருளின் நோக்கம்,  தொல்காப்பிய நூற்பாக்களுக்கு உரையை அளிப்பது இல்லை. மாறாக, தொல்காப்பியரின் மொழிநடைபற்றிய ஒரு தரவுமொழியியல் ஆய்வாக அமைந்துள்ளது. அந்தத் தரவுமொழியியல் அடிப்படையில் கிடைக்கப்பெறுகிற அனைத்துத் தகவல்களையும் கணினிவழியே விரைவாகப் பெறுவதற்கு உதவி செய்யும் மென்பொருளாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

4. தமிழிணையம் – தமிழ்ப் பயிற்றுவி

இது தமிழ் மொழிக் கற்றல் கற்பித்தல்  கருவிகள்  அடங்கிய  மென்பொருள்.  தமிழ் சொற்களஞ்சியம், வினை மற்றும் பெயர்ச்சொற்களைக் கற்பதற்கு  இக்கருவி உதவும். இந்தக் கருவிகள் தமிழ் மொழி பயிற்றுவிப்பாளர்களுக்குத் தங்கள் மொழித் திறன்களை மேம்படுத்த உதவுகின்றன. இது அமிர்தா பல்கலைக்கழகத்தின் (Amrita University, Coimbatore ) உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

5. தமிழிணையம் – நிகழாய்வி

தமிழிணையம் – நிகழாய்வி  இது ஒரு செல்பேசி செயலி.  இச்செயலி செய்தித்தாள்களில் இருந்தும் தமிழ் வலைத்தளங்களில்  இருந்தும் உலகெங்கிலும் நடக்கும் சமீபத்திய நிகழ்வுகளை எடுத்துரைக்கிறது. நிகழ்வில் தொடர்புடைய நபர்கள், நிகழ்வுகள் மற்றும் நிகழ்வின் விளைவு  ஆகியவற்றை இது வழங்குகிறது. அண்ணா பல்கலைக் கழகத்தின் (எம்.ஐ.டி வளாகம், குரோம்பேட்டை, சென்னை)  - AU-KBC ஆராய்ச்சி மையத்தின் மொழியியல் ஆராய்ச்சி குழு (CLRG)  உதவியால் இது உருவாக்கப்பட்டது.

தமிழ்