தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

- கோயிற்கட்டடக் கலை நுட்பங்கள்

  • பாடம் - 6

    D05116 : கோயிற்கட்டடக் கலை நுட்பங்கள்
    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

        ஆலயங்கள் கட்டடப்படும் காலத்து எத்தகைய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்பதைப் படிப்படியே விளக்கிக் கூறுகிறது. நிலம் தேர்ந்தெடுத்து, ஆலய அங்கங்களாகிய சுவர் முதலியவற்றை எப்படி அமைப்பது என்ற திட்டத்தை இந்தப் பாடம் கூறுகிறது.

        தமிழக ஆலயங்கள் படிப்படியே விரிவுபடுத்தப்பட்ட நிலையில் வகை வகையான மண்டபங்கள் கட்டப்பட்டதையும், மண்டப விதானச் சிறப்பையும், தாங்கு தளமாகிய அதிட்டானத்தின் பலவகைகளையும், சிறப்பாக மகா மண்டபத்தை அமைக்கும் விதிகளையும் இப்பாடம் விளக்கிக் கூறுகிறது.

        எண்ணிக்கை அடிப்படையில் கட்டப்படும் ஆயிரக்கால் மண்டபம் முதலியவற்றையும், தெய்வங்களைத் தூண் அமைப்பில் காணும் கற்பனை நலத்தையும் விளக்கிச் செல்கிறது.

        சிற்பத்தூண்கள் எவ்வாறெல்லாம் வளர்ச்சி நிலையில் வடிவமைக்கப்பட்டன என்பதையும், கோபுரத்தூண், தீபத்தூண் ஆகியவற்றை பற்றியும், இசைத் தூண்களைப் பற்றியும் விளக்கம் தருகிறது.

        ஆலயத்தின் முக்கிய உறுப்பான கருவறை, சதுரமாகவும் நீள் சதுரமாகவும் வட்டமாகவும் அமைந்துள்ளமை பற்றி இந்தப் பாடம் விளக்குகிறது. அபிடேகம் புரிகையில் வெளியேறும் நீர் பிரநாளம் வழியே செல்லும்; அந்தப் பிரநாளம்     கலையமைப்புடன்     பொருந்தியிருப்பதைச் சொல்லுகிறது.

        ஆலயத்தில் கருவறைக்கு மேலுள்ள விமானம் எப்படியெல்லாம் கலை நுட்பத்துடன் அமைகிறதென்பது பற்றி புலப்படுத்துகிறது.

        ஆலயத்தில்     படிக்கட்டுகள்     பலவகைகளில் அமைப்பதற்கான காரணமும் கூறப்படுகின்றன.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • ஆலயம் கட்டுவது என்பது எளிதான செயலன்று, கட்டுவதற்குரிய நுட்பங்களைத் தெரிந்து கொண்டு செயல்பட அடிப்படையாக, நிலத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியமானது எனத் தெரிந்து கொள்ளலாம்.

    • தமிழக     ஆலயங்களில் காணப்படும்     பலவகை மண்டபங்களைப்     பற்றித் தெரிந்து கொள்ள வாய்ப்பு உண்டாகிறது.

    • எண்ணிக்கை அடிப்படையில் ஆயிரக்கால் மண்டபம் பதினாறுகால் மண்டபம் முதலிய பலவகை மண்டபங்களின் சிறப்பு அறியப்படும்.

    • திருவீழிமிழலை வௌவால்     நெத்தி மண்டபத்தில் கையாளப்பட்ட கலைத்திறமை ஒப்புமை கூறமுடியாத சிறப்பினையுடையதாகும்; இதனைச் சிற்பியரே ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் எழுதும்போது குறிப்பிடுவர் என்ற உண்மை கூறப்படுகிறது; இதனால், தமிழகத்தின் கட்டடக் கலைப் பெருமை தெரிய வரும்.

    • சந்திர காந்தக்கல் நீரைச் சுரக்கும் இயல்பினது; இவ்வுண்மையைத் தெரிந்து கொண்டு, தென்திருத்திட்டைத் தலத்தில் விமானத்திலே பொருத்திக் கருவறையிலுள்ள சுவாமி மீது நீர் விழுமாறு செய்துள்ள கலைத்திறமை புலப்படுத்தப்பட்டுள்ளது.

    • படிக்கட்டுகளிலும் ஓமகுண்டங்களிலும் கூடக் கலைத்திறமை காட்டப்படுகின்றது;      இவ்வுண்மை     நன்கு புலப்படுத்தப்படுகின்றது.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:47:53(இந்திய நேரம்)