தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kappiyam-6. பெரிய புராணம்- கண்ணப்ப நாயனார் புராணம்

  • பாடம் - 6

    P10416 பெரிய புராணம்-கண்ணப்ப நாயனார் புராணம்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    சிறந்த தமிழ்க் காப்பியங்களுள் ஒன்று பெரிய புராணம் இந்நூலில் இலைமலிந்த சருக்கத்தில் பத்தாவது உட்பிரிவு கண்ணப்ப நாயனார் புராணம். இப்பகுதி என்ன சொல்கிறது என்பதை இப்பாடம் விளக்குகின்றது.

    திண்ணனார், குடுமித் தேவர் மீது கொண்டிருந்த பக்தி (மெய்யன்பு) புலப்படுத்தப்படுகின்றது. திண்ணனார், சிவகோசரியார் ஆகிய இருவரின் வழிபாட்டு நிலைகளில் சடங்குகளை விட உணர்வே உயர்ந்தது என்பதனை இப்பாடம் விளக்குகின்றது.

    இறைவனுக்கே, தம் கண்ணைப் பிடுங்கி அப்பியதால் திண்ணனார் கண்ணப்பர் என்று அழைக்கப்பட்ட சிறப்பு இப்பாடத்தின் வழி தெரிவிக்கப் பெறுகின்றது.

    தனி மனித வாழ்வுக்கும், சமுதாய வாழ்வுக்கும் அன்பே முதன்மையானதும் சிறந்ததும் ஆகும் என்பதனை இப்பகுதி உணர்த்துகின்றது.

    புராணத்தில் இடம் பெறும் திண்ணனாரின் கண்தானச் செயல், இற்றைக்கால அறிவியல் வழிப்பட்ட கண்தானங்களுக்கு முன்னோடியாகவும் முற்போக்குச் சிந்தனை உடையதாகவும் திகழ்வதை இப்பாடத்தின் வழி அறியலாம்.

    ஆகம நெறியினும், அன்பு நெறியே சிறந்தது என்பதனை இப்பாடம் உணர்த்துகின்றது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    சோழர் காலத்தில் தோன்றிய காப்பியங்களுள் தமிழ்க் காப்பியமாக, பெரியபுராணம் விளங்குகின்றது என்பதனை அறிந்து கொள்ளலாம்.

    ஆட்சி முறையில் தந்தைக்குப் பின் மகன் ஆளல் என்னும் வாரிசு உரிமை முறை, இறைப் பற்று, அன்பு நெறி ஆகியன பற்றியும், தன்னை இழந்தால் இறைவனின் அருள்கிடைக்கும் என்னும் ஆன்மிக உண்மையையும் இப்பகுதியால் அறிந்து கொள்ளலாம்.

    அறிவு நெறியைக் காட்டிலும் அன்பு நெறியே மேம்பட்டது, வீடுபேறு அளிப்பது என்பதனைக் கண்ணப்பர் வரலாற்றின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

    ஞான யோகம், கர்ம யோகம் ஆகிய இரண்டிலும் மேம்பட்டதாகப் பக்தி யோகம் திகழ்கின்றது என்னும் தத்துவக் கருத்தினை உணர்ந்து கொள்ளலாம்.

    ஆறே நாட்களில் வழிபாடு செய்து சிவனருள் பெற்ற கண்ணப்பரின் வரலாறு மூலம், எத்தனைக் காலம் வழிபாடு செய்கின்றோம் என்பதை விட. எப்படி வழிபாடு செய்கின்றோம் என்பதே இன்றியமையாதது என்னும்
    கருத்தினைப் பெரிய புராணம் புலப்படுத்தி நிற்பதனை அறிந்து கொள்ளலாம்.

    நூலாசிரியரின் பெருமை, திண்ணனாரின் சிறப்பு, பக்தி நெறி ஆகிய செய்திகளை முறைப்படுத்திக் காணலாம். அடியார்களின் பக்தி நிலை பற்றி அறிந்து கொள்ள இப்பாடம் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

    பாட அமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 09:56:54(இந்திய நேரம்)