தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

  • பாடம் - 3

    P10423 பாரதியாரின் 'பாஞ்சாலி சபதம்'

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?



    மன்னர்களைப் பற்றியும், மதங்களைப் பற்றியும் கவிதைகள் புனைந்த காலம் மாறி, மக்களை மையமாக வைத்துத் தனது பாட்டுத்திறத்தால் நானிலத்து மக்கள் மேனிலையடையப் பாடிய பாரதியைப் பற்றிச் சொல்கிறது.

    இந்திய இதிகாசங்களுள் ஒன்றான மகாபாரதத்தில் கதையின் திருப்புமுனையானதும் பாரதப் போரின் தொடக்கமானதுமான ‘பாஞ்சாலி சபதத்தை’ இந்தப் பாடம் குறிப்பிடுகிறது. பாஞ்சாலி சபதத்தின் மூலம் நாட்டு விடுதலையைப் பற்றி எடுத்துரைக்கிறது.

    யாவரும் அறிந்த கதையைக் கொண்டு, யாவரும் அறிந்து கொள்ள வேண்டிய உள்ளுறைப் பொருளாகப் பாரத தேவியைப் பாஞ்சாலியாக வைத்துப் படைத்துள்ளதைக் குறிப்பிடுகிறது.

    உரிமைகளை இழந்து அடிமைப்பட்ட, தோற்கக்கூடாத தாய் மண்ணைத் தோற்றுநிற்கும் இந்தியர்க்கும், இந்தியாவிற்கும் பாண்டவர்களையும் பாஞ்சாலியையும் - வெள்ளையர்க்குக் கௌரவர்களையும் குறியீடாக்கி உணர்த்துவதை எடுத்துரைக்கிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?



    இந்தப் பாடத்தைப் படித்து, இதில் வரும் பாடல்களின் கருத்துகளை ஆழ்ந்து சிந்திப்பீர்களானால், பின்வரும் சமூக மாற்றங்களையும் சீர்திருத்த எண்ணங்களையும் பெறலாம்.

    • இந்தப் பழைய கதை ‘தமிழ் மக்களுக்குப் புதிய வாழ்வினைத் தருமா? என்பதை விளக்கலாம்.

    • விடுதலை வேட்கை, சமநிலைச் சமுதாயத்தைப் படைத்தல் போன்ற உணர்வுகளை எடுத்துரைக்கலாம்.

    • நாட்டு விடுதலையின் மூலம் பெண் விடுதலையை உணர்த்தலாம்.

    • பழங்காலக் கவிதையைக் கொண்டு சமகாலக் கண்ணோட்டத்தில் காவியத்தை அமைத்திருப்பதால் ‘பாஞ்சாலி’யின் மூலம் முற்போக்குக் கருத்துகளை எடுத்துச் சொல்ல முடியும்.

    • பண்டிதத் தமிழ்நடையிலிருந்து விடுபட்டு, எளிய நடையில், எளிய பதங்கள் கொண்டு மக்கள் விரும்பும் வகையில் மெட்டு அமைத்துப் பாடல்களை உருவாக்கியுள்ள விதத்தினை அறியலாம்.

    • ‘பாஞ்சாலி சபதம்’ - வடமொழி வியாச பாரதம், வில்லிபாரதம் ஆகியவற்றின் தன்மைகளிலிருந்து மாறுபட்டுத் தமிழ்ச்சூழலுக்கு ஏற்பப் படைக்கப்பட்டிருத்தலை அறியலாம்.

    • பெண்ணுரிமையைப் பெண் வாயாலேயே கேட்க வைத்திருப்பதை உணரலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 10:03:29(இந்திய நேரம்)