தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 1main-இப்பாடதொகுதி பற்றிய ஒரு பொது விளக்கம்


தொகுதிப் பொது விளக்கம்

இந்தத் தொகுதியில் சமணம் சார்ந்த தமிழ் இலக்கியங்கள் பற்றி நான்கு பாடங்களும்,
பௌத்தம் சார்ந்த தமிழ் இலக்கியங்கள் பற்றி இரண்டு பாடங்களும் இடம்
பெற்றள்ளன.

சமண சமயம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் வேரூன்றியதாகக்
கருதப்படுகின்றது. இந்தச் சமயம் சார்ந்த கருத்துகள் பல பழந்தமிழ் இலக்கியங்களில்
காணப்படுகின்றன. தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, திருக்குறள்
ஆகியவற்றிலும் சமண சமயக்கருத்துகள் காணப்படுகின்றன. இவை பற்றிப் ‘பழந்தமிழ்
நூல்களில் சமணம்’ என்னும் தலைப்பிலான முதல் பாடம் விளக்குகிறது.

தமிழ்க் காப்பியங்களில் தலைசிறந்த காப்பியங்களைப் படைத்த பெருமை
சமணர்களுக்கு உண்டு. ஐம்பெருங்காப்பியங்களுள், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி,
வளையாபதி ஆகியவை சமணர்களின் அரிய படைப்புகளாகும். ஐஞ்சிறு
காப்பியங்களும் சமணர்களால் படைக்கப்பட்டன என்பர். இக்காப்பியங்களுள் இடம்
பெற்றுள்ள சமண சமயக் கருத்துகள் பற்றிச் ‘சமணத் தமிழ்க் காப்பியங்கள்’ என்ற
இரண்டாவது பாடம் குறிப்பிடுகிறது.

சமணர்கள், இலக்கணங்கள், நிகண்டுகள் ஆகியவற்றையும் படைத்தனர். இலக்கியங்
களுக்கு உரை எழுதினர். இவை எவ்வாறு தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தின
என்பதனைப் பற்றி, மூன்றாவது பாடமான ‘சமண இலக்கணங்கள். நிகண்டுகள் மற்றும்
உரைகள்’ எடுத்துரைக்கிறது.

நான்காவது பாடம் ‘சமணச் சிற்றிலக்கியங்கள், ‘புராணங்கள், புற நூல்கள்’ எனும்
தலைப்பிலானது. இதில் சமணர்கள் தம் சமய கோட்பாட்டிற்கேற்ப சிற்றிலக்கிய
வகைகளைப் படைத்தமை, புராணங்களைப் படைத்து மணிப்பிரவாள நடைக்கு
முன்னோடியாக இருந்தமை முதலியன கூறப்படுகின்றன.

அசோக மன்னர் ஆட்சிக் காலத்தில் பௌத்த சமயம் தமிழகத்தில் பரவியது.
பௌத்தவிகாரங்களையும், பௌத்தப் பள்ளிகளையும் நிறுவிய பௌத்தர்கள்
இலக்கியப்பணிகளையும் ஆற்றினர். இவை பற்றிய செய்திகள் ‘பழந்தமிழ்
நூல்களில் பௌத்தம்’ எனும் தலைப்பிலான ஐந்தாவது பாடத்தில் கூறப்பட்டுள்ளன.
‘பௌத்தத் தமிழ்க் காப்பியங்களும் பிற நூல்களும்’ என்ற தலைப்பிலானது ஆறாவது
பாடம். இப்பாடத்தில், மணிமேகலை, குண்டலகேசி ஆகிய காப்பியங்கள் எவ்வாறு
பௌத்த சமயக் கோட்பாட்டின் ஆவணமாகத் திகழ்கின்றன என்பது முதலில்
விளக்கப்படுகிறது. அதன் பின்னர், பௌத்தர்களால் இயற்றப்பெற்ற வீரசோழியம்,
சித்தாந்தத் தொகை, திருப்பதிகம், விம்ப சாரக் கதை முதலிய நூல்கள் எவ்வாறு
இலக்கிய வளம் சேர்த்தன என்பதுவும் விளக்கப்படுகின்றன.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:48:26(இந்திய நேரம்)