தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தீய பண்புகள்

  • 5.5 தீய பண்புகள்

    மானுட குல கீழ்மைக்குரிய தீய பண்புகளைப் பற்றியும் பல கருத்துகளை வழங்கியுள்ளார்.

    5.5.1 சிறுமை

    மனித குலத்தை அழித்துவிடும் தீய பண்புகள் சிலவற்றையும் புலவர் விவரித்துள்ளார். மனிதர்க்கு ஆகாத இப்பண்புகளைத் தீய பண்புகள் என்று குறிப்பிடலாம். சிறுமை உடைய சிறியோர் இயல்பினைப் புலவர் ஒரு பாடலில் படம் பிடித்து உள்ளார். ஐயம் இல்லாமல் கற்றாலும் கேட்டாலும் உறுதிப் பொருளைச் சொன்னாலும் உலகில் சிறியோர் அடங்கி நடந்து நற்கதி அடையமாட்டார்கள். கங்கை நதிக் கரையில் படர்ந்தாலும் பேய்ச்சுரைக்காய் நல்ல சுரைக்காயாக ஆகாதே என்று சிறியோர் இயல்பு கூறப்பட்டுள்ளது. (ண்.சத. 14)

    5.5.2 பொய்மை

    பொய்யுரைத்தலின் கேட்டினைப் புலவர் விளக்கி உள்ளார். இதுவும் மனித குலத்திற்கு ஆகாத தீய பண்புகளுள் ஒன்றாகும். பொய் சொல்லும் வாயினருக்கு உண்ண உணவு கிடைக்காது. பொருளும் நிலைத்து நிற்காது. சிவனின் முடியைப் பிரம்மன் கண்டார் எனத் தாழை மலர் பொய் உரைத்தது. ஆனால் அது வாழ்ந்தது உண்டோ? (தாழைமலர் பொய் சொன்னதால் அது வழிபாட்டுப் பொருளில் இருந்து நீக்கப்பட்டது.) பொய்யுரைத்தவன் வாழ்ந்தது இல்லை என்பதே மெய்ம்மை ஆகும். இதனை

    ...........................பொய்சொல்லும் வாயினர்க்குப் போசனமும்
        கிடையாது பொருள் நில்லாது
    மைசொல்லும் காரளிசூழ் தாழைமலர்
        பொய்சொல்லி வாழ்ந்தது உண்டோ
    மெய்சொல்லி வாழாதான் பொய்சொல்லி
        வாழ்வதில்லை மெய்ம்மை தானே

    (தண்.சத. 31)

    (போசனம் = உணவு, அளி = வண்டு, மெய் = உண்மை)

    என்று புலவர் விவரிப்பர். ‘அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான்’ என்ற பழமொழி மூலம் அற்பர்களின் குணங்களைச் சதகம் விளக்கி உள்ளது. அறிவுடையோர்க்கு வாழ்வு வந்தால் மிகவும் வணங்கிக் கண்ணோட்டம் செய்வர். அற்பருக்கு வாழ்வு வந்தால் கண் இருந்தும் குருடராய்ச் செருக்கு உற்றுப் பலருக்கும் துன்பம் செய்வர். (ண்.சத. 57)

    5.5.3 வஞ்சனை

    வசை மிகும்படி தகாத செயல்களைச் செய்து மற்றவர் பொருளை வலிந்து பறித்துத் தானம் செய்வோர் உண்டு. இது பசுவினைத் துன்புறுத்திக் கொன்று அதன் தோலினால் செருப்புச் செய்து அச்செருப்பைத் தானமாகத் தருவதற்கு ஒப்பானது. உலகில் பிறர் வாழும் குடியை வஞ்சனையால் கெடுப்பவர் உள்ளனர். இவ்வாறு வஞ்சனையாகக் கெடுப்பதற்கு நினைத்தாலும் சொன்னாலும் அத்தகையோன் தானாகவே கெடுவான் என்பது உண்மை. இதனைப் பின்வரும் பாடல் விளக்கும்,

    மண்ணுலகில் பிறர்குடியை வஞ்சனையில்
         கெடுப்பதற்கு மனத்தி னாலே
    உன்னிடினும் உரைத்திடினும் அவன்தானே
         கெடுவான்என்பது உண்மை அன்றோ

    (தண்.சத. 65)

    (உன்னிடினும் = நினைத்திடினும்)

    இவ்வாறாகப் புலவர் மனித குலத்திற்கு ஆகாத தீய குணங்கள் பலவற்றைத் தண்டலையார் சதகத்தில் வெளிப்படுத்தியுள்ளதை அறிய முடிகின்றது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-08-2017 13:20:58(இந்திய நேரம்)